இந்தியா கூட்டணியினர் கோழைகள்: பிரதமர் மோடி தாக்கு!
இந்தியா கூட்டணியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களை கோழைகள் என விமர்சித்தார்
இந்தியாவின் சக்தி அதிகரித்து வருவதை உலகமே காண்கிறது. இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(Pok) உள்ள மக்களும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார். இதே கருத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு எதிர்விணையாற்றிய ஜம்மு காஷ்மீர் மாநிலம் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, “பாதுகாப்பு அமைச்சர் கூறிவிட்டால் அதை செய்ய வேண்டியது தான். அவர் கூறியதை தடுப்பதற்கு நாங்கள் யார? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் கைகளில் வளையல்கள் அணிந்திருக்கவில்லை. அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது. துரதிஷ்டவசமாக அவை நம் மீதும் விழலாம்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களை, பாகிஸ்தானின் அணுசக்திக்கு பயந்தவர்கள்; கோழைகள் என விமர்சித்தார். பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.
வெறுப்புணர்வை தூண்டும் பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர்.: மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம்!
இந்தியக் கூட்டணியில் பாகிஸ்தானுக்குப் பயந்து, அதன் அணுசக்தியைப் பற்றிய பீதியடையும் கனவுகளை கண்டு வருவதாக தெரிகிறது என பிரதமர் கூறினார். “பாகிஸ்தான் வளையல்களை அணியவில்லை என்றால். அந்நாட்டை நாம் அணிய வைப்போம். அவர்களிடம் உணவு தானியங்கள் இல்லை என்று எனக்குத் தெரியும். அவர்களிடம் போதுமான வளையல்கள் கூட இல்லை என்பது இப்போது தான் எனக்கு தெரியவந்துள்ளது.” என்றார்.
அதேசமயம், கோழை மக்கள் நிறைந்த எதிர்க்கட்சியினரை நாம் பார்க்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பயங்கரவாதத்தில் பாகிஸ்தானுக்கு க்ளீன் சிட் கொடுக்கும் கோழைகள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர். அவர்களது இடதுசாரி கூட்டாளிகள் கூட நமது அணு ஆயுதங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றார்.
முன்னதாக, ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, அரசியல்வாதிகளுக்கு எதிரான சோதனையில் மீட்கப்பட்ட பணம், நாட்டின் ஏழைகளுக்கு சொந்தமானது என்று கூறினார்.