Asianet News TamilAsianet News Tamil

‘டாப்- 10 பல்கலைக்கு’ ரூ.10 ஆயிரம் கோடி நிதி! உலகத் தரத்துக்கு உயர்த்த மோடி திட்டம்...

PM Modi in Patna 20 universities to get Rs 10000 crore over 5 years for world class education system
PM Modi in Patna 20 universities to get Rs 10000 crore over 5 years for world-class education system
Author
First Published Oct 14, 2017, 5:42 PM IST


நாட்டில் உள்ள முதன்மையான 10 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழங்களுக்கு ரூ.10  ஆயிரம் கோடி நிதி அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு, உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும் என்று பிரதமர்நரேந்திர மோடி உறுதியளித்தார்.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் மாநில முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

பீகாரில் உள்ள நாளந்தா பல்கலை, தக்‌சஷீலா பல்கலையில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். ஆனால், இருந்தும், நாம் உலகில் முதல் 500 பல்கலைக்கழகங்களுக்குள் இடம் பெற முடியவில்லை. இந்த கறையை நாம் நீக்க வேண்டும். இந்த நிலையை மாற்ற வேண்டும் தீர்மானத்துடன் கடினமாக உழைக்க வேண்டும்.

இதற்காக இந்த அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள முதன்மையான 10 தனியார், மற்றும் அரசு பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி அளித்து உலகத்தரத்துக்கு உயர்த்தப்படும். இந்த பல்கலைக்கழங்களுக்கு சுயாட்சி அதிகாரம் அளித்து, எந்த விதமான தடையும் இல்லாமல் செயல்பட்டு, சுதந்திரமாக வளர உதவி செய்யப்படும்.

இந்த பல்கலைக்கழங்களைத் தேர்வு செய்ய எந்தவிதமான பரிந்துரையும் ஏற்கப்படாது. பல்கலைக்கழகங்களின் திறமையான செயல்பாடு, சவால்களை எப்படி எதிர்கொள்கின்றன என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பல்கலையின் வரலாறு, செயல்திறன், செயல்திட்டம், சர்வதேச அளவில் மதிப்பீடு ஆகியவை தரமதிப்பீடுகளாக எடுக்கப்படும்.  மூன்றாம் அமைப்பு ஒன்று தேர்வுக்குழுவில் இடம் பெற்று தேர்வு செய்யும்.

பாட்னா பல்கலைக்கழகம்  சர்வதேச அளவில் புகழ்ெபற்றதாகும். இந்த தரத்தில் இருந்து அது எப்போதும் குறைந்துவிடக்கூடாது. நம் நாட்டின் கல்வித்துறை மிகவும் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. கல்வியாளர்களுக்கு இடையே பலவிதமான வேறுபாடுகள் இருக்கின்றன. இதனால், அரசுடன் இணைந்து புத்தாக்கங்களை உருவாக்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாட்டில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் நிதிமேலாண்மையை சுயமாக கையாளலாம் என்ற அரசு அதிகாரம் அளித்துள்ளது. முதல்முறையாக ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக பயன்படுத்துக் கொள்ள அவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கும் இடமாக பாட்னா பல்கலை விளங்கி வருகிறது, அதேசமயம், ஐ.ஐ.எம். நிறுவனங்கள் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளை உருவாக்கும் அளிக்கிறது.

நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 35வயதுக்கு கீழானவர்கள் 65 சதவீதம் இருப்பதால், வளர்ச்சிக்கான கனவு நிறைவேறும் என நம்புகிறோம். உலகளவில் ஏற்படும் மாற்றங்களை நாம் புரிந்து கொள்வது அவசியம், போட்டிகளுக்கு ஏற்றார்போல் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios