தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கேதார்நாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி குகை கோயிலில் தியானத்தில் ஈடுபட்டார்.


 நாடாளுமன்றத்துக்கு இறுதிகட்ட தேர்தல்  நாளை நடைபெற உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக பிரதமர் மோடி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இறுதிகட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததால், ‘சற்று ஓய்வெடுப்பேன்’ என்று தெரிவித்திருந்தார் மோடி.
அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றார். அங்குள்ள கேதார்நாத் கோயில்லுக்கு இன்று சென்ற மோடி, கோயிலில் வழிபாடு செய்தார். பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள சிறிய குகைக்குள் சென்று மோடி தியானம் செய்தார். அப்போது அவர் முழுமையாக காவி உடை அணிந்திருந்தார். பிரதமரான பிறகு 4-வது முறை கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேதார்நாத்தில்  தனது பயணத்தை முடித்துக்கொண்டு  ஞாயிறு அன்று பத்ரிநாத் செல்லவும் மோடி திட்டமிட்டுள்ளார். முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டெல்லியிலிருந்து கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடை அணிந்து கோயிலுக்கு நடந்து சென்றார்.