மகளிர் இடஒதுக்கீடு: பிரதமர் மோடி எப்போதுமே ஆதரவு - மெய்ப்பிக்கும் பழைய செய்திகள்!
பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருந்துள்ளார் என்பதை அவரது பழைய செய்திகள் மெய்ப்பிகின்றன
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்த இந்த அமர்வின்போது, வரலாற்று சிறப்புமிக்க மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பின் 128ஆவது திருத்த மசோதா, 2023 நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நாரி சக்தி வந்தன் அதினியம் என பெயரிடப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை அமல்படுத்திய பிறகே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலுக்கு வரும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு என்பது சுமார் 27 ஆண்டுகால கனவு. 1996ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சியில் போடப்பட்ட விதை, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் உயிர் பெற்றுள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. அப்போதெல்லாம் மசோதா நிறைவேறவில்லை. முதல்முறையாக இந்த மசோதா மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை.
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் - முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி ஆட்சிகாலத்தில் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியுள்ளது. இருப்பினும், இந்த மசோதா எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், மக்கள்தொகை, தொகுதி மறுவரையறை ஆகியவை மூலமாக தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருந்துள்ளார் என்பதை அவரது பழைய செய்திகள் மெய்ப்பிகின்றன. 2000ஆம் ஆண்டில் வெளியான பத்திரிகை செய்திகளில் இடம்பெற்ற மோடியின் பேட்டி, எப்போதுமே அவர் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக உள்ளது. பிரதமர் மோடி தொடர்பான செய்திகளின் காப்பகமாக செயல்படும் modiarchive என்ற எக்ஸ் பக்கத்தில், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான மோடியின் பேட்டி அடங்கிய அந்த பழைய செய்தித்தாள்களின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அதில், 2000ஆம் ஆண்டு பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த மோடி, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிப்பதில் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், மசோதா நாடாளுமன்றக் குழுக்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததுடன், ஒருமித்த கருத்தும் ஏற்படவில்லை. இருப்பினும், மோடியின் பார்வை தெளிவாக இருந்துள்ளது. இறுதியில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி பிரதமராக இருக்கும்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் மூலம் இந்த மசோதா உண்மையாகிவிட்டது.