டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் உலகத்தின் பிற நாடுகளில் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 203 நாடுகளுக்கு பரவி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

உலகம் முழுவதும் 12,319 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 64,667 பேர் உயிரிழந்துள்ளனர். 8,89,478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயால் வல்லரசு அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது.

 

இந்தியாவிலும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். கொரோனா தடுப்பிற்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இனி வரும் நாட்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடி இருக்கின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, 'கொரோனா வைரஸ் தொடர்பாக நீண்ட உரையாடலை அதிபர் ட்ரம்ப்புடன் மேற்கொண்டேன். நாங்கள் சிறந்த ஆலோசனைகளைச் செய்தோம். அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் முழு பலத்துடன் இணைந்து போராடுவது என ஒப்புக்கொண்டோம்' என்று கூறியிருக்கிறார்.