நமோ பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கு வைத்தார் பிரதமர் மோடி!
நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்
இந்தியாவின் முதல் செமி ஹைஸ்பீடு பிராந்திய ரயில் சேவையான 'நமோ பாரத்' சேவையை உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் ஷாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ ரயில் நிலையங்களை இணைக்கும் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்தியாவில் மிதல் பிராந்திய விரைவு ரயில் சேவை (ஆர்ஆர்டிஎஸ்) செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் உள்பட ரயிலில் பயணித்தவர்களிடம் அவர் கலந்துரையாடினார். “நமோ பாரத் என்பது மாற்றத்திற்கான பிராந்திய மேம்பாட்டு முயற்சியாகும். இது நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அதிவேக ரயில்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிராந்திய விரைவு ரயில் சேவையான (Regional Rapid Train Service) இதன் பெயர் ‘ரேபிட் எக்ஸ்’ என இருந்தது. நேற்றைய தினம் இதன் பெயர் ரேபிட்எக்ஸ் என்பதிலிருந்து நமோ பாரத் என மாற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவைக்கு பிறகு, முக்கியமான நடவடிக்கையாக நமோ பாரத் தொடங்கப்பட்டுள்ளது. மாநில நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்தும், பிராந்திய விரைவு ரயில் சேவைக்கான (Regional Rapid Train Service) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
201 கி.மீ மைலேஜ்: Pure EV ePluto 7G MAX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!
டெல்லி - காஜியாபாத் - மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டிப்போ ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.