சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2023: பிரதமர் மோடி வாழ்த்து!
மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட அரசு குடிமை பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய முறைப்படி நடத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்கு 1016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொது பிரிவில் 347 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில்115 பேர், ஓபிசி பிரிவில் 303 பேர், எஸ்சி பிரிவில் 165 பேர், எஸ்டி பிரிவில் 86 பேர் என மொத்தம் 1016 பேர் வெற்றியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “2023ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பலன் கிடைத்துள்ளது. இது பொது சேவையில் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அவர்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
'கோவை ரைசிங்': கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!\
அதேபோல், தேர்வில் வெற்றியடையாத மாணவர்கள் துவண்டு விடாத வண்ணம் அவர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கமும் அளித்துள்ளார். “சிவில் சர்வீசஸ் தேர்வில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, பின்னடைவுகள் கஷ்டமாக இருக்கும். ஆனால் அது உங்கள் பயணத்தின் முடிவு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அதையும் தாண்டி பிரகாசிக்கக்கூடிய உங்கள் திறமைகளுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் முன்னால் உள்ள எண்ணற்ற சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.