பாரத மண்ணில் விதைக்கப்பட்ட பொருளாதார வழித்தடம்: பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் பாரத மண்ணில் விதைக்கப்பட்டது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்3 வெற்றி, ஜி20 உச்சி மாநாடு ஆகிய இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.
“சந்திரயான் – 3இன் லேண்டரானது, சந்திரனின் மீது இறங்கும் தருவாயில் இருந்த போது, கோடிக்கணக்கான மக்கள், பல்வேறு வழிகளில், ஒரே நேரத்தில் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு நொடியின் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோ அமைப்பின் யூ-டியூப் நேரடி ஒளிபரப்பில், 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வினைக் கண்டார்கள் என்பதே மிகப்பெரிய சாதனை. சந்திரயான்-3 உடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை ஆழமாக இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, ஜி20 மாநாட்டின் அருமையான ஏற்பாடுகள், பாரத நாட்டு மக்கள் அனைவருடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். ஜி20 உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பினை ஜி 20இன் முழுமையான உறுப்பினராக ஆக்கி, தலைமைப் பொறுப்புக்கு இந்தியா பெருமை சேர்த்தது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் 6,000 கி.மீ. தொலைவு பொருளாதார வழித்தடம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “பாரதம் மிகவும் வளமான தேசமாக இருந்த, அந்தக் காலத்தில், நமது தேசத்திலும் சரி, உலகிலும் சரி, சில்க் ரூட் எனக் கூறப்படும் பட்டுப் பாதை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்தப் பட்டுப் பாதையானது, வணிகத்துக்கான மிகப்பெரிய வழித்தமாக இருந்தது. இப்போது நவீன யுகத்திலே, பாரதமானது மேலும் ஒரு பொருளாதார வழித்தடத்தை ஜி 20இலே முன் வைத்தது. அது என்னவென்றால், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார இடைவழியாகும். இந்த வழித்தடம் வரவிருக்கும் ஆண்டுகளில் உலக வணிகத்தின் ஆதாரமாக மாறும், மேலும், இந்த வழித்தடத்துக்கான வித்திடல் பாரத மண்ணில் விதைக்கப்பட்டது என்பதற்கு வரலாறு சாட்சியாக விளங்கும்.” என்றார்.
சொன்னதை செய்த ஸ்டாலின்: கோவை சாலைகளில் ஆய்வு!
இன்றைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னணுப் புத்தகங்களுடையது என்பது உண்மை தான் என்றாலும், புத்தகங்கள் நமது வாழ்க்கையில் என்றுமே ஒரு நல்ல நண்பன் என்ற பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆகையால், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை நாம் குழந்தைகளிடத்திலே ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
உயிரினங்களை அனைத்து வகைகளிலும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, “தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத் அவர்களும் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிவதில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே கூட 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார். அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் இவர் உறுதியாக இருக்கிறார். நேரிய நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது.” என்று பாராட்டினார்.
பண்டிகைக்காலம் தொடங்கி விட்டதை சுட்டிக்கட்டிய பிரதமர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்தார். நீங்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்கும் போது இதன் நேரடி தாக்கமும் ஆதாயமும், நமது உழைப்பாளர்கள், நமது கைவினைஞர்கள், கலைஞர்கள், பிற விச்வகர்மா சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் என்று அவர் கூறினார்.