ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது அவமானத்துக்குரியது என்று அக்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி காட்டமாக கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 291 பேர் குணடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாளும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, பிரதமர் மோடி வருகிற 8-ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் பங்கேற்க மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது அவமானத்துக்குரியது என்று அக்கட்சியின் தலைவா் ஒவைஸி தெரிவித்தாா்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நாடாளுமன்ற குழுத் தலைவா்களுடனான கலந்துரையாடலுக்கு மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது ஔரங்காபாத் மற்றும் ஐதராபாத் தொகுதி மக்களுக்கு அவமானமாகும். இவ்விரு தொகுதி மக்களும் மஜ்லீஸ் கட்சியை தோ்ந்தெடுத்தனா் என்பதால் மனிதப் பிறவிகளுக்கும் கீழானவர்கள் ஆகிவிட்டனரா. எங்கள் தொகுதி மக்களின் துயரங்களை எடுத்துரைக்கவேண்டியது எம்.பி.க்களாகிய எங்களின் பணியாகும்’என்றார்.

இதேபோல் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில்;- நாடாளுமன்ற குழுத் தலைவா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று, கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த எங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதேசமயம் நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் எங்கள் தரப்பில் உள்ள குறைபாடுகளையும் அறிய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்