பிரதமர் மோடி முக்கிய துறைகளின் செயலாளர்களுடன் அவசரகால கூட்டம் நடத்தி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு எதிரான தயார்நிலையை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை, முக்கியமான துறைகளைக் கையாளும் 20 செயலாளர்களை விழிப்புடன் இருக்கவும், அவசரகால தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தி இருக்கிறார். அத்தியாவசிய அமைப்புகள் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எந்தவொரு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி நடைபெற, உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பில் கவனமாக இருக்கவும் பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செயலாளர்களுக்கு உத்தரவு:

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அமைப்புகளின் செயல்பாட்டில் எந்தத் தடுமாற்றமும் இல்லை என்பதையும், எந்தவொரு சைபர் தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய, அந்தந்த அமைச்சகம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அந்தந்த துறையின் செயல்பாடுகளை விரிவான ஆய்வு செய்யவும் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதை ஒருநாளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடந்துள்ளது. அணுசக்தி, விண்வெளி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் விவகாரங்கள், சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எல்லை மேலாண்மை போன்ற உள்கட்டமைப்புத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் பிரதமருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

துறைகளின் ஒருங்கிணைப்பு:

தேசிய அளவில் துறைகளின் தயார்நிலை மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உரையாடலுக்குப் பிறகு, உயர் அதிகாரிகள் தங்கள் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து கூட்டங்களை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை இந்திய அரசு மதிப்பாய்வு செய்துள்ளது. எந்தவொரு தீவிரமான சூழலையும் திறம்பட எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க இந்திய அரசு ஆயத்தமாகி வருவதைக் இந்தக் கூட்டம் உணர்த்துகிறது.