ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை: நாட்டு மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!
ஒரு மாத காலத்திற்கு நாட்டு மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரு மாத காலத்திற்கு நாட்டு மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தூய்மை பாரதம் இயக்கத்தின் வெற்றி எப்படி அதற்கே ஒரு ஊக்கமாக ஆகியிருக்கிறதோ, அதே போல, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் வெற்றி, வளர்ந்த பாரதம்-தன்னிறைவான பாரதத்திற்கான கதவுகளை அகலத் திறந்து கொண்டிருக்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கம், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்குமே பலம் சேர்க்கிறது.” என்றார்.
உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, “இது வளர்ச்சிக்கான உத்திரவாதம், இது தேசத்தின் சரிசமமான வளர்ச்சிக்கான உத்திரவாதம். இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் சமமான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். இதன் வாயிலாக, வட்டார உற்பத்திப் பொருட்களின் மதிப்புக்கூட்டலுக்கான பாதையும் பிறக்கிறது. ஒருவேளை உலகப் பொருளாதாரத்தில் ஏற்றம்-வீழ்ச்சி வருமானால், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம், நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.” என்றார்.
பாரதநாட்டு உற்பத்திப் பொருட்களிடத்தில் இருக்கும் இந்த உணர்வு, பண்டிகைகளோடு மட்டும் நின்று போய் விடக்கூடாது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். “அடுத்து திருமணக்காலம் தொடங்கியாகி விட்டது. சில வணிகச் சங்கங்களின் அனுமானம் என்னவென்றால், திருமணங்களின் இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் கோடி ரூபாய் வியாபாரத்திற்கான சாத்தியக்கூறு இருக்கிறதாம். திருமணங்களோடு தொடர்புடைய வாங்குதலிலும் கூட, நீங்கள் அனைவரும் பாரதநாட்டுப் பொருட்களுக்கே மகத்துவம் அளிக்க வேண்டும்.” என அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், மேலும் ஒரு பெரிய போக்கு காணக்கிடைக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, ரொக்கப்பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கக்கூடிய வழிமுறை மெல்லமெல்லமெல்ல இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து குறைந்து வருவதை நாம் காண்கிறோம். அதாவது இப்போது மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இதுவும் கூட மிகவும் உற்சாகமளிக்கும் விஷயமாகும். நீங்கள் மேலும் ஒரு வேலையைச் செய்யலாம். ஒரு மாதக்காலத்திற்கு, நான் யுபிஐ மூலமோ, ஏதோ ஒரு டிஜிட்டல் வழி மூலமாக மட்டுமே பணத்தை அளிப்பேன், ரொக்கமாக அளிக்க மாட்டேன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.” என தெரிவித்தார்.
மேலும், “பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் வெற்றி தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு மாதம் ஆன பிறகு, நீங்கள் உங்களுடைய அனுபவங்கள், உங்கள் புகைப்படம் ஆகியவற்றைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள்.” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.