மார்ச் 25ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக முதற்கட்டமாக ஏப்ரல் 14ம் தேதி வரை விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னரும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிற்கு எவ்வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால் மே 17ம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, 3வது கட்ட ஊரடங்கின் கட்டுப்பாடுகள் 4ம் கட்ட ஊரடங்கிற்கு தேவைப்படாது என தெரிவித்திருந்தார். நேற்றைய சந்திப்பின் போது ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும், அதே நேரத்தில் மிக குறைந்த கட்டுப்பாடுகளே விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

கொரோனாவால் முடங்கியுள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகை வழிநடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளதாக திடமாக தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது எனக்கூறினார். 

இதனிடையே இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நான்காவது கட்ட பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து மே 18ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும், அப்படி அறிவிக்கப்படும் 4ம் கட்ட ஊரடங்கு நடைமுறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் 4ம் கட்ட ஊரடங்கில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.