பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க, அந்நாட்டு அனுமதி கொடுத்தும் இந்தியா அதனை மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் விமானம் மாற்றுப்பாதையில் பறக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் வான் எல்லைகள் மூடப்பட்டன. இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியிலும், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் இந்திய வான்வெளியிலும் பறக்க தடை விதிக்கப்பட்டது. இத்தடையை இந்தியா கடந்த மாதம் 31-ம் தேதி விலக்கிக் கொண்ட பிறகும், பாகிஸ்தான் வரும் 14-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

 

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் கிர்கிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கேற்க பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கி உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது என தெரியவந்துள்ளது. விவிஐபி விமானம் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கேக் நகருக்கு செல்லும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.