பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியானது தனது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பாகிஸ்தானில் பிரச்சாரம் மேற்கொள்வதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியானது பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். பணம் கொடுத்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை தீவிரமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த சம்பித் பத்ரா, பிரதமருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் குறித்த பிரதிகளை செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் நரேந்திரமோடியை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு என்ன அர்த்தம் என்று வினவியுள்ள அவர், உலகில் மிகவும் பிரபலமான பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாகிஸ்தானில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொள்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இப்படி ஒரு விளம்பரத்தை இந்தியாவில் மேற்கொண்டிருந்தாலும் ஒரு அர்த்தம் உண்டு என்று கூறியுள்ள அவர், ஆனால் பாகிஸ்தானில் இதைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் தங்கள் விசுவாசத்தை பாகிஸ்தானிடம் காட்டுவதாகவும் சம்பித் பத்ரா கடுமையாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சி நிர்வாகி நவ்ஜோத் சித்துவின் கருத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தென்னிந்தியாவை காட்டிலும் கலாச்சார ரீதியாக பாகிஸ்தானுடன் தான் இணைந்திருப்பதாக நவ்ஜோத் சிங் பேசியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இவர் மட்டும் அல்லாமல் பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியாவும் பாகிஸ்தானில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் காங்கிரசின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் காட்டப்படுகிறது. அதில் நாடு என்ற பிரிவில் இந்தியாவை கிளிக் செய்யும் போது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொடர்பான விளம்பரங்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானில் கிளிக் செய்யும் போது, பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சார விளம்பரம் தெரிகிறது. இந்தப் பிரச்சனை தற்போது பூதாகரமாகியுள்ளது.