Asianet News TamilAsianet News Tamil

Breaking: தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் பிஎம் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா; பிரதமர் மோடி அறிவிப்பு!!

PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் ஜவுளித் துறையை மேம்படுத்தும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

PM MITRA mega textile parks in 7 states including Tamil Nadu: PM Modi tweet
Author
First Published Mar 17, 2023, 2:32 PM IST

PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign - பண்ணை முதல் ஃபைபர் முதல் ஃபேக்டரி முதல் ஃபேஷன் முதல் வெளிநாட்டு வரை) என்ற அளவுகோலில் ஜவுளித் துறையை மேம்படுத்தும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது டுவிட் மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை அனுமதியளித்த இருந்த நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.4,445 கோடி செலவிடப்படும். அதன் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு (பிஎம் மித்ரா) பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 7 ​​லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தனியார் - மத்திய அரசு கூட்டமைப்பில்  அமைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

ஏழு மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மற்றும் ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும் மாநிலங்களின் பெயர்கள் விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

PM MITRA பூங்காக்களுக்கான இடத்தை தேர்வு செய்வதில் சவால்கள் இருக்கின்றன. ஜவுளி தொழிற்சாலை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வசதிகளுடன் கூடிய 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் வசதிகள் இருக்கும் மாநிலங்கள் மட்டும் மத்திய அரசை தொடர்பு கொள்ளலாம் என்று அழைப்பு விடப்பட்டு இருந்தது. 

இந்த PM MITRA பூங்காக்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜவுளி தொழில்துறைக்கு உதவும். நூற்பு, நெசவு, பதப்படுத்துதல்/சாயமிடுதல் மற்றும் அச்சிடுதல் முதல் ஆடை உற்பத்தி வரை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நடைபெறும். இந்தப் பூங்காக்கள் உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 

உலகளாவிய ஜவுளி உற்பத்தி வரைபடத்தில் இந்தியாவை வலுவாக நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை 2021 அக்டோபரில் மொத்தம் 4,445 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்து இருந்தது.

மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை உருவாக்குவது அரசின் நோக்கமாகும். ஒரே இடத்தில்  ஆடைகள் உற்பத்தி, சந்தைப்படுத்துதல், வடிவமைத்தல் மற்றும் ஏற்றுமதி ஆகிய அனைத்தையும் கொண்டிருப்பதாகும். அனைத்து அடிப்படை வசதிகளும் ஒரே இடத்தில் இருப்பதால், ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், ஏற்றுமதி சந்தையும் உயரும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் ஜவுளித் துறை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. உலக அளவில் ஆடை ஏற்றுமதியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios