பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தகாங்கிரஸ் கட்சி அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளையும் ஒன்று திரட்டிவலுவாக எதிர்க்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
 
அதனால், பிரதமர் பதவியை ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாத பிறக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவருக்கு விட்டுத்தர இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மம்தா பானர்ஜி அல்லது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், ஹவுராவில் உள்ள மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போதுள்ள நிலை குறித்து இருவரும் விவாதித்தோம். மேலும் தேசிய அளவில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், சிறுபான்மையினரிடையே தற்போதும் நிலவும் அச்சம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.
 
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். அந்த கூட்டணியை எப்படி அழைப்பது என்று முடிவு செய்யவில்லை. இருப்பினும், பாஜகவுக்கு எதிராக இருப்பவர்கள் எங்களுடன் இணைய வேண்டும். இதன்மூலம் பாஜகவை தோற்கடிக்க முயற்சிக்கலாம். மேலும், பிரதமர் வேட்பாளருக்கான போட்டிக்கு மம்தா பானர்ஜி பொருத்தமானவர்.

கொல்கத்தாவில் அவர் மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை தேசிய அளவில் எடுத்துச் செல்ல அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம்”என்றார். இதையடுத்து பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் கேவலமானதாக இருப்பதாக விமர்சித்தார். பாஜகவால், திரிணாமுல் காங்கிரஸ் மிரட்டப்படுவதாகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் பாஜக அல்லாத அரசு மக்களுக்காக பணியாற்றும் என்றும் உறுதியளித்தார்.