மறைந்த ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வருவது குறித்த விவரங்கள் கிடைக்கும்போது முறையாக தெரிவிப்போம் என்றும், யாரும போன் செய்து கேட்க வேண்டாம் என்றும் போனி கபூர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு துபாய் சென்றபோது அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். காலமான ஸ்ரீதேவியின் உடல் நேற்று இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டு சட்டதிட்ட விதிகளின்படி ஸ்ரீதேவியின் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த பரிசோதனைகள் முடிந்து அறிக்கை கிடைக்கப்பெற தாமதமாவதால் இன்று மாலை ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் குடும்பதினர், அவரது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேவியின் மறைவு குறித்து அவரது கணவர் போனி கபூர் சார்பில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் மற்றும் கபூர், அய்யப்பன், மர்வா குடும்பத்தினர் ஸ்ரீதேவி கபூரின் திடீர் மரணத்தால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த துக்க நேரத்தில் மீடியா, ரசிகர்களின் ஆதரவுக்கும், பிரார்தனைக்கும் நன்றி. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வரவுள்ளது. அது குறித்த விவரங்கள் கிடைக்கும்போது முறையாக தெரிவிக்கிறோம். தயவு செய்து யாரும் போன் செய்து கேட்க வெண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.