Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Plea file in Supreme court challenges grant of Grace Marks
Author
First Published Jun 10, 2024, 5:23 PM IST

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வில் (NEET) மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் தேசிய தேர்வு முகமையின் (NTA) முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் விண்ணப்பதாரரான ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாரிபட் கார்த்திக் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் பதிவாளரிடம் மனுதாரரின் வழக்கறிஞர்கள் ஒய்.பாலாஜி, சிராக் ஷர்மா ஆகியோர் முறையிட்டுள்ளனர்.

நேர இழப்பு என்ற அடிப்படையில் 1536 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய தேசிய தேர்வு முகமையை எதிர்த்து அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் மனுதாரர் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான 'நார்மலைசேஷன் ஃபார்முலா'வை தவறாகப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது தன்னிச்சையானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் செயல் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட்டதால், நேர இழப்பை துல்லியமாக அளவிட எந்த அளவுகோலும் இல்லை எனவும், நேர இழப்பு ஏற்பட்டால் கருணை மதிப்பெண்கள் வழங்குவதை நியாயப்படுத்த எந்த மதிப்பீடுகளும் அல்லது அறிக்கைகளும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில்,  2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு? சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு எழுதியவர்களில் 1536 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றது, குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது என நீட் தேர்வு முடிவுகள் தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios