மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை திட்டித் தீர்த்துவரும் வேளையில், அக்கட்சியின் எம்.பி.யும் மோடி அதிருப்தியாளருமான சத்ருகன் சின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளார். 

சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டிருக்கும் மம்தாவை பாராட்டி வரிசையாக சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டார். முதல்  ட்வீட்டில், “ஹவாய் செருப்புகளும் காட்டன் சேலையுமே அடையாளமாகக் கொண்டவர் மம்தா. பாஜக இப்போது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. மக்கள் நாம் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்கத் தயாராக இல்லை. 

அதனால், மம்தாவுக்கு எதிராக பதற்றத்தில் பாஜக எதிர்வினையாற்ற வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல மற்றொரு ட்வீட்டில், “என்ன நடக்கிறது? அரசு அமைப்பின் வாயிலாக எதற்காக நெருப்புடன் விளையாடுகிறோம்? அதுவும் தேர்தல் வரும் வேளையில் இப்படி ஏன் செய்ய வேண்டும்? வங்கத்து பெண் புலி. சோதனைகளைக் கடந்த மக்கள் அபிமானம் பெற்ற அப்பழுக்கற்ற தலைவரை ஏன் குறிவைக்கிறார்கள்?" எனப் பதிவிட்டார்.

 

சத்ருகன் சின்ஹாவின் இந்தக் கருத்துக்கு ட்வீட்டரில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சின்ஹாவின் ட்வீட்களை ரீட்வீட் செய்து பாஜகவினரை வெறுப்பேற்றினர்.