எவரெஸ்ட்டில் வெற்றிக் கொடி நாட்டிய எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே; பிளாட்டினம் விழாவுக்கு ஏற்பாடு!!
சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்கே இருவரும் 1953, மே-29ல் எவரெஸ்ட் மலை மீது ஏறி வெற்றி சரித்திரம் படைத்து இருந்தனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் (8848 மீட்டர்) உச்சியில் கால் பதித்தனர். உலகின் மிக உயரமான சிகரத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் உற்சாகத்துடன் தொட்டு இருந்தனர். இந்தாண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு முதன் முறையாக ஏறிய அந்த நாளை நினைவு கூறும் வகையில் பிளாட்டினம் விழா கொண்டாடப்பட இருக்கிறது.
இந்திய மலையேறுதல் அறக்கட்டளை, அபெக்ஸ் தேசிய அமைப்பானது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அமைப்பு மலையேறுதல், மலையேற்றம் அதனுடன் இணைந்த சாகச நடவடிக்கைகள் என 1960, 1962, 1965, 1984, 1993 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் எவரெஸ்ட் சிகரத்திற்கான பயணங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏற்பாடு செய்து இருந்தது.
எவரெஸ்ட் சிகரம் ஏறும் பொன்விழா 2003-ல் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக இருந்தது. IMF ஏற்பாடு செய்து இருந்த இந்த விழாவை அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் துவக்கி வைத்து இருந்தார்.
பிளாட்டினம் விழாவில் IMFம் இந்த முறை கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 5ஆம் தேதி IMF வளாகத்தில் மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை இந்த விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் முதன் முறையாக எவரெஸ்ட் மலையேறி சாதனை படைத்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்கே இருவரின் குடும்பத்தினர் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர்.
மத்திய இளைஞர் விவகார அமைச்சகம் & விளையாட்டுத்துறை செயலாளர் மீடா ராஜீவ்லோசன் தலைமை விருந்தினராகவும், மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் & நெடுஞ்சாலை அமைச்சக கூடுதல் செயலாளர் அமித் குமார் கோஷ் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.
''இந்திய மலையேற்றத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கம். எவரெஸ்ட் சிகரத்தின் முதல் ஏற்றம் மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டம் மற்றும் சவால்கள்'' என்ற தலைப்பில் ரீட்டா கோம்பு மார்வா மற்றும் பிரிக் அசோக் அபே ஆகியோர் பேச இருக்கின்றனர்.
உலக சுற்றுச்சூழல் தினமாகவும் ஜூன் 05, 2023 கொண்டாடப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வாக இந்த தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இமயமலையை பாதுகாப்பதில் முன்னோடியாக IMF இருந்து வருகிறது. IMF வளாகத்தில் மரங்கள் நடப்பட இருக்கிறது.