ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. 

ஜவுளி, பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி உள்ளிட்ட சில துறைகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு - குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஜி.எஸ்.டி.யால் சென்னை மாநகர ஏசி பேருந்துகளில் ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதற்கு பயணிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருச்சி, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. திருச்சி ரயில் நிலையத்தை தவிர்த்து மற்ற ரயில் நிலையங்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 2 மடங்காக உயர்த்தப்பட்டதற்கு ரயில் பயணிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.