Asianet News TamilAsianet News Tamil

டெஸ்லா தொழிற்சாலைக்கு பியூஷ் கோயல் விசிட்: மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

எலான் மஸ்கின் டெஸ்லா தொழிற்சாலையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பார்வையிட்டார்

Piyush goyal visited tesla factory elon musk apologises for not meeting him smp
Author
First Published Nov 14, 2023, 5:06 PM IST | Last Updated Nov 14, 2023, 5:06 PM IST

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு இன்று சென்ற அவர், ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைய பார்வையிட்டார். மேலும், டெஸ்லா குழுமத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது டெஸ்லா இணை நிறுவனர் எலான் மஸ்க் உடனில்லை. உடல்நிலை குறைவால் அவர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில், “கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லாவின் உற்பத்தி உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டேன். டெஸ்லாவின் இயக்கத்தை மாற்றியமைக்கும் குறிப்பிடத்தக்க பயணத்தில் பங்களிக்கும் திறமையான இந்திய பொறியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் மூத்த பதவிகளில் டெஸ்லாவில் பணிபுரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “டெஸ்லா எலக்ட்ரிக் வாகன விநியோகச் சங்கிலியில் முக்கிய ஆட்டோ உதிரிபாக சப்ளைராக இந்தியா உள்ளது என்பதையும், இந்தியாவிலிருந்து அதன் உதிரிபாகங்கள் இறக்குமதியை டெஸ்லா இரட்டிப்பாக்கப் போகிறது என்பதையும் பார்த்து பெருமிதம் கொள்கிறோம்.” எனவும் பியூஷ் கோயல் பதிவிட்டுள்ளார்.

 

 

எலான் மஸ்கின் இருப்பை தவறவிட்டேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் எனவும் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “நீங்கள் டெஸ்லாவை பார்வையிட்டது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இன்று கலிபோர்னியாவுக்குப் பயணிக்க முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், ஆனால் எதிர்காலத்தில் சந்திப்பதற்காக காத்திருக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்ட பின்னர், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டாய், கொரியக் குடியரசின் வர்த்தக அமைச்சர் துக்யுன் அஹ்ன் மற்றும் சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க எஸ்கேப் டனல் அமைக்கும் பணி தீவிரம்!

அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் கீழ் சாத்தியமான ஒத்துழைப்பு, இருதரப்பு வர்த்தகம் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள், உலக வர்த்தக அமைப்பு தொடர்பான விஷயங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பிரச்சனைகள் குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் விவாதித்தார். சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய சகாக்களுடனான உரையாடலின் போது, முறையே ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் ஆகியவற்றின் மறுஆய்வை விரைவாக முடிக்க அமைச்சர் பரிந்துரைத்தார்.

பியூஷ் கோயல் தனது அமெரிக்க பயணத்தின் போது, மூன்றாவது தனிப்பட்ட ஐபிஇஎஃப் அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தவும், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் இந்தப் பயணத்தின் போது அவர் பிரபல வர்த்தகர்கள், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios