பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தான் சாம்பியன் என்றும் அதனை இப்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி நன்றாக தெரியும், அவர்களது பொய் பிரச்சாரத்தால் எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை என கூறினார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் - பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே அவ்வப்போது அரசியல் மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த மோதல்கள் அண்மைக்காலமாக  படுகொலையில் முடிவதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது.

படுகொலை தொடர்பாக ஆளும் மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநில அரசின் மீது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தான் சாம்பியன் என்றும்  அதனை இப்பொழுது செய்து அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். 
ஆனால் கேரள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி நன்றாக தெரியும் என்று கூறிய பினராயி விஜயன், அவர்களது பொய் பிரச்சாரத்தால் எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை என தெரிவித்தார்.