சவுதி அரேபியாவிற்கு சொந்தமான 2 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியாகும் சவுதியில், தற்போது நடத்தப்பட்ட தாக்குதலால், 57 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 50 சதவீத எண்ணெயும் அழிந்ததாக கூறப்படும் நிலையில், உலகளவில் நாள் ஒன்றுக்கு 5 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படப்போகும் மாற்றங்கள்தான் தற்போது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக சவுதி அரேபியா இருந்து வரும் நிலையில், இதன் தாக்கம் இந்தியாவையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு ஒரு டாலர் அதிகரித்தால், இந்தியாவின் ஒரு ஆண்டிற்கான கச்சா எண்ணெய் செலவு 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு, சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்கள் பாதிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.