Asianet News TamilAsianet News Tamil

உஷார்…பைக், கார்ல பெட்ரோல் இருக்கானு பாத்துக்கோங்க… 16-ந்தேதி முதல் பெட்ரோல் நிலையங்கள் ஸ்டிரைக்?

petrol bunks strike on june 16
petrol bunks strike on june 16
Author
First Published Jun 11, 2017, 5:54 PM IST


நாடுமுழுவதும் வரும் 16-ந்தேதி பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 16-ந்தேதி ஒருநாள் மட்டும் பெட்ரோல் நிலையைங்களை மூடப் போவதாகவும், கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், 24-ந்தேதி முதல் காலவரையற்று மூடப்படும் என  டீவலர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அரசு எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் முடிவை கடந்த 8ந்ததேதி எடுத்தன. இதன்படி, வரும் 16-ந்தேதி முதல் நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கும் முறை நடைமுறைக்கு வர  உள்ளது.

இதனால், நடைமுறைச் சிக்கல்கள் பல இருப்பதாக பெட்ரோல், டீசல் நிலைய உரிமையாளர்கள், டீலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் முடிவை கைவிடக்கோரி எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் நிலைய டீலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இல்லாவிட்டால், 16-ந்தேதி நாடு தழுவிய “ஸ்டிரைக்” நடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அனைத்து இந்திய பெட்ரோல் நிலைய முகவர்கள் அமைப்பின் தலைவர் அஜய்பன்சால் கூறுகையில், “ அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்ற முடிவுசெய்துள்ளன. இந்த முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஒவ்வொரு நாளும் நள்ளிரவு நாங்கள் விலையை மாற்றுவதற்கு சில மணிநேரங்கள் ஆகும், அந்த நேரத்தில் பெட்ரோல் நிலையத்தை மூட வேண்டியது இருக்கும்.

இந்த புதிய விலையை பம்ப்புகளிலும், கால்குலேட்டர்களிலும் நாள்தோறும் மாற்றிக்கொண்டு இருப்பது என்பது நடைமுறைக்கு இயலாதது. மேலும், எரிபொருள் இருப்பு, மீட்டர் ரீடிங் ஆகியவையும் நள்ளிரவு கணக்கு எடுப்பதும் கடினமானது. இதுகுறித்து வரும் 13-ந்தேதி எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்த இருக்கிறோம்.

14-ந்தேதி 7 மாநிலங்களின் டீலர்கள், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்திக்க இருக்கிறோம். எங்கள் கோரிக்கைக்கு நல்ல முடிவு கிடைக்காவிட்டால், 15-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களை அடைத்து ஒருநாள் போராட்டத்தில் ஈடுபடுவோம். 24ந் தேதிக்குள் முடிவை வாபஸ் பெறாவிட்டால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

மேலும்,அனைத்து இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் பத்வார் கூறுகையில், “ நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றுவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி நாங்கள் வரும் 16-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம்.

அன்று பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும். எங்கள் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், வரும் 24-ந்தேதி முதல் காலவரையற்று பெட்ரோல் விற்பனை நிறுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 58 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் தனியார் டீலர்கள் மூலமே நிர்வகிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் 70 சதவீதம் பெட்ரோல் நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios