கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய  மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைப்பெற்று மே 19-ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இந்தக் காலத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பெரிய அளவிற்கு உயர்ந்து விடாமல் மோடி அரசு பார்த்துக் கொண்டது.விலை உயர்ந்தால், அது தேர்தலில் தங்களுக்கு எதிராக மக்களைத் திருப்பி விடும் என்ற பயமே அதற்குக் காரணம்.

ஆனால், தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. திங்கட்கிழமையன்று பெட்ரோல் விலை 10 காசுகள் வரையிலும், டீசல் விலை 16 காசுகள் வரையிலும் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.87 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.97 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.