ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் பதவி ஏற்று இருப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை  பாட்னா உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமில்லாதது என்று நீதிபதிகள் தெரிவித்து தள்ளுபடி செய்தனர்.

பீகாரில், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், கடந்த வாரம் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். சட்டசபையில் பெரும்பான்மை இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை அழைக்காமல் ஆளுநர் திரிபாதி, 2-ம் இடத்தில் இருக்கும் நிதிஷ் குமாரைஆட்சி அமைக்க அழைத்தார் என்று சர்ச்சை எழுந்தது. சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 131 வாக்குகள் பெற்று நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியினர் 108 வாக்குகள் பெற்றனர். 

இது குறித்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.சரோஜ் யாதவ், சந்தன் வர்மா ஆகியோரும், மற்றொரு மனுவை சமாஜ்தி வாதி கட்சி உறுப்பினர் ஜிதேந்திர குமாரும் தனித்தனியாக தாக்கல் செய்தனர். இந்த மனுவௌ்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் இதை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

இதையடுத்து, இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், ஏ.கே. உபாத்யாயேஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர்கள் தரப்பில் பி.சி.பாண்டே,பூபேந்திர குமார் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

அப்போது, “ சட்டசபையில் தனிப் பெரும் கட்சியாக இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்து இருக்க வேண்டும். இது உச்ச நீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. ஆதலால், புதிதாக பதவி ஏற்ற அரசை கலைக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டனர். மாநில அரசு சார்பில் ஓய்.வி. கிரி, மத்திய அரசு சார்பில் எஸ்.டி. சஞ்சய் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, “சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுவிட்டு, கட்சிக்கு ஆட்சி அமைத்துள்ளது. இனிமேல் வேறொன்றும் இல்லை. 131 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதே நடைமுறைதான் கோவா மாநிலத்திலும் பின்பற்றப்பட்டது’’ என்றனர். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ராஜேந்திர மேனன், ஏ.கே. உபாத்யாய, “ சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்தபின், அதில் நீதிமன்றம் தலையிடுவது  அவசியமில்லாதது. ஆதலால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.