Asianet News TamilAsianet News Tamil

புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்

Petition in Supreme Court to prohibit the appointment of the Election Commissioner under the new law smp
Author
First Published Mar 11, 2024, 4:49 PM IST

தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதற்கிடையே அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையர் குழுவில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். தற்போது, அருண் கோயலின் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது: ராகுல் காந்தி தாக்கு!

புதிய சட்டத்தின்படி, பிரதமர், பிரதமர் நியமிக்கும் அமைச்சர், மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் மூன்று உறுப்பினர் குழுவில் முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இருந்தார். ஆனால், தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு புதிதாக சட்டம் இயற்றியது. அதன்படி, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருப்பர்.

இந்த நடைமுறையின்படி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இதையடுத்து, பிரதமர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட 3 பேர் குழுவானது பரிந்துரை செய்யப்பட்ட 5 பேரில் இருவரது பெயரை இறுதி செய்யும். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிடுவார்.

Follow Us:
Download App:
  • android
  • ios