நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது: ராகுல் காந்தி தாக்கு!

தேர்தல் பத்திரங்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது என சாடியுள்ளார்

PM Modi donation business is going to be exposed Rahul Gandhi attack on supreme court electoral bond sbi verdict smp

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை 2024ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தேர்தல் பத்திரங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் மாதம் வரை அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க கால அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ. வங்கியின் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

எஸ்பிஐ வங்கி நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் எனவும், மார்ச் 15ஆம் தேதிக்குள் அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடும் உத்தரவை  செயல்படுத்த தவறினால் எஸ்.பி.ஐ அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது என சாடியுள்ளார்.

 

 

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது. சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டுத் தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, சொந்த வங்கியின் விவரங்களை மறைத்து உச்ச நீதிமன்றத்தில் தலைகுனிந்துள்ளது. நரேந்திர மோடியின் உண்மையான முகம்  தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிப்படப் போகிறது. இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலாக தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நிரூபணம் ஆகப்போகிறது.” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios