ரெயில்வே துறை சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிளக்சி ஃபேர் கட்டணம் மூலம், ஒரு ஆண்டுக்குள்ளாகவே கூடுதலாக ரூ. 540 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரெயில்வே துறை ‘பிளக்சி ஃபேர் கட்டணம்’ முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முதல் 10 சதவீத இருக்கைகள் சாதாரண கட்டணத்திலும், அடுத்த 10 சதவீத இருக்கைகளின் கட்டணம் அடுத்தடுத்து 10 சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கும். இது 50 சதவீதம் வரை இருக்கும். இந்த திட்டத்துக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது-

சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளக்சி ஃபேர் கட்டணம் மூலம் 2016 செப்டம்பர் முதல், 2017 ஜூன் மாதம் வரை ரூ. 540 கோடி வருவாய் ஈட்டியுள்ளோம். நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் ரூ.240 கோடி கூடுதல்வருவாய் கிடைத்துள்ளது. மாதத்துக்கு ரூ.80 கோடி கூடுதலாக கிடைத்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.960 கோடி வரை கிடைக்கும்.

இப்படி, நல்ல வருவாய் கிடைத்து கொண்டு இருக்கும்போது, இந்த திட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும்.  இந்த திட்டத்தன் மூலம் கூடுதலாக 85 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த திட்டத்தை பயணிகள் வெறுக்கவில்லை. இந்த திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு ஏராளமான தள்ளுபடிகள் கிடைக்கிறது. இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 கடைசி நேரத்திலும், திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இதில் ஏராளமான தள்ளுபடிகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரெயில்களில் பயணிகள் அட்டவணை தயார் செய்த  பின், காலியாக இ ருக்கும இருக்கைகள், படுக்கைகளைப் பொருத்து 30 சதவீதம் தட்கல் கட்டணம் தள்ளுபடி, அடிப்படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் தள்ளுபடி ஆகியவை பயணிகளுக்கு அளிக்கப்படும்.