உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதை வலியுறுத்தி தற்போது 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 77 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக இருந்த நிலையில் தற்போது அது மேலும் உயர்ந்து 3375 அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 525 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் ஆறுதல் தரும் செய்தியாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நேற்று வரையில் 213 ஆக இருந்த குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 267 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பிலும் பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக குஜராத்தில் 10 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் 6 பேரும், பஞ்சாபில் 5 பேரும் தமிழகத்தில் நான்கு பேரும், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் மூன்று பேரும்,  ஜம்மு-காஷ்மீர், உத்தர பிரதேஷ் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேரும் பலியாகி இருக்கின்றனர்.