பிரதமர் மோடிக்கு ஃபோன் போட்ட இஸ்ரேல் பிரதமர்: போர் குறித்து அப்டேட்!
பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பேசியுள்ளார்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளனர்.
அதேபோல், காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது. போர் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். நான்காவது நாளாக இன்றும் தொடரும் இந்த போரில், இரு தரப்பிலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1200ஐத் தாண்டியுள்ளது.
காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தாலும், இந்த முறை கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு, தூதரகம் வாயிலாக மேற்கொண்டு வருகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா தனது ஆதரவையும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பேசியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நெதன்யாஹு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: அச்சத்தில் மலையாளிகள்!
இஸ்ரேலின் எல்லைகள் வழியாக ஊடுருவி, கடுமையான தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அதேசமயம், காசா மீது முழு முற்றுகையை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, மின்சாரம், உணவு, தண்ணீர், எரிவாயு ஆகியவை வழங்கப்படாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.