சமூக விலகலை கடைபிடிக்காமல் கையில் விளக்குகளுடன் வீதிகளில் ஊர்வலமாக வந்தவர்களின் வீடியோவும் புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன. 
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சமுக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளை கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்திவருகிறார். 
இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஞாயிறு இரவு 9 மணியில் இருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி  நேற்று இரவு 9 மணிக்கு பலர் வீடுகளில் அகல் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தனர். ஆனால், பிரதமரின் வேண்டுகோளை சரியாகப் பின்பற்றாமல் பட்டாசுகளை வெடிக்கவும் செய்தனர்.


மேலும் விளக்குகளை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலமாகவும் பலர் சென்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கொண்டாட்ட வடிவில் ஈடுபட்டது சமூக வளைதளங்களி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன. இதேபோல மார்ச் 22 அன்று பால்கனியில் நின்று கைதட்ட பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளையும் வீதிகளில் பலர் ஊர்வலமாகச் சென்று, சமூக இடைவெளியைக் கேள்விக்குள்ளாக்கியதும் நடந்தது குறிப்பிடத்தக்கது.