தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள்: சாம் பிட்ரோடா கருத்தால் சர்ச்சை!
இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, அண்மையில் இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்த நிலையில், இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என பேசி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியாவின் நிலையை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேசியபோது, அவ்வப்போது மோதல்கள் இருந்தபோதிலும், 75 ஆண்டுகளாக இணக்கமாக வாழும் அதன் மக்களின் திறனை எடுத்துக்காட்டினார். ஆனாலும், இன ரீதியாக அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
“இந்தியாவைப் போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டை நாம் ஒன்றிணைக்க முடியும் -- கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைப் போலவும் இருப்பார்கள். அது ஒரு பொருட்டல்ல. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்.” என சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபடும் பல்வேறு மொழிகள், மதங்கள், சமையல் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிற்கு இந்திய மக்கள் மரியாதை காட்டுகிறார்கள் என்று பிட்ரோடா விரிவாகக் கூறினார். “அதுதான் நான் நம்பும் இந்தியா, அங்கு அனைவருக்கும் ஒரு இடம் இருக்கிறது, எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக சமரசம் செய்கிறார்கள்.” என அவர் கூறினார்.
ஜனநாயகம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகள் தற்போது சவால்களை எதிர்கொள்வதாக சாம் பிட்ரோடா கவலை தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பேச்சு, ராம நவமி கொண்டாட்டம், பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கோவில்களுக்கு செல்வது போன்ற நிகழ்வுகளை மேற்கோள் காட்டிய அவர், இத்தகைய நடவடிக்கைகள் தேசிய தலைமைக்கும், கட்சி அரசியலுக்கும் இடையிலான எல்லையை மழுங்கடிக்கிறது என்றார்.
அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை காங்கிரஸ் பெற்றது? பிரதமர் மோடி கேள்வி!
சாம் பிட்ரோடாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இனவாதம் தொடர்பான கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “காங்கிரஸின் சகுனி, சாம் பிட்ரோடா அக்கட்சியின் ஆபத்தான மற்றும் பிளவுபடுத்தும் மனநிலையை அம்பலப்படுத்துகிறார்.” என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சிஆர் கேசவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சாம் பாய், நான் வட கிழக்கைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியனாகத் தெரிகிறேன். நாம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு - நாம் வித்தியாசமாகத் தோன்றலாம் ஆனால் நாம் அனைவரும் ஒன்றுதான்.” என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.