அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை காங்கிரஸ் பெற்றது? பிரதமர் மோடி கேள்வி!
அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை காங்கிரஸ் வாங்கியுள்ளது என ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ஆம் தேதியும் நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற 13ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலம் கரீம் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்களின் ஆசியால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி ரதம் வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் பியூஸ் போய் விட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
“நாடு முழுவதும் நேற்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாவது கட்டத்தில், காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் மூன்றாவது பியூஸ் போய் விட்டது. இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு எஞ்சியுள்ள நிலையில், மக்களின் ஆசீர்வாதத்தால் ஆசியால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி ரதம் வேகமாக முன்னேறி வருகிறது.” என்றார்.
தேசத்தின் நலனை முதன்மையாக கொண்டு செயல்படும் கட்சி பாஜக எனவும், குடும்ப உறுப்பினர்களின் நலனை முதன்மையாக கொண்டு செயல்படும் கட்சி காங்கிரஸு, பிஆர்எஸும் என பிரதமர் மோடி சாடினார்.
குடும்பமே முதலில் என்ற இந்தக் கொள்கையால், பி.வி. நரசிம்மராவை காங்கிரஸ் அவமதித்ததாகவும், அவர் இறந்த பிறகு அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க மறுத்ததாகவும் காங்கிரஸ் கட்சி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி பாஜக அவருக்கு மரியாதை செய்ததாகவும் குறிப்பிட்டார்.
தேர்தலுக்காக அம்பானி மற்றும் அதானியிடம் காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) அறிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து எவ்வளவு கறுப்புப் பணம் கிடைத்தது? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, அம்பானி மற்றும் அதானியை 5 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சித்த அவர், ஒரே இரவில் அவர்களை விமர்சிக்காமல் இருக்க என்ன ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜகவின் முதல் எம்.எல்.ஏ. காலமானார்: அண்ணாமலை இரங்கல்!
காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு அங்கமாக ஊழல் உள்ளது. பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் ஒரே ஊழல் நடவடிக்கைகளில் சிக்கியுள்ளதாக பிரதமர் மோடி சுட்டிக்காடினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவாக இருந்தாலும் சரி, தெலுங்கானாவாக இருந்தாலும் சரி, நம் நாட்டில் திறன்களுக்குப் பஞ்சம் இல்லை. விவசாயம் மற்றும் ஜவுளித் துறைகள் இந்தியாவின் பலமாக இருந்தன. ஆனால், இத்தனை ஆண்டுகளாக, காங்கிரஸ் அரசுகள் செய்தது ஒரே ஒரு வேலையைத்தான் - நாட்டின் ஒவ்வொரு திறனையும் அழித்தொழித்தது. நாட்டை அழித்தது காங்கிரஸ் என்று சொல்லுங்கள். காங்கிரஸ்தான் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.” என விமர்சித்தார்.
முன்னதாக, ஹைதராபாத்தில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள வெமுலவாடாவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வர சுவாமி கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். கோவில் அர்ச்சகர்கள் மோடியின் நெற்றியில் திலகம் வைத்து ஆசீர்வாதம் வழங்கினர். கரீம் நகர் பிரசாரக் கூட்டத்தை தொடர்ந்து, அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பேரணியிலும், அதைத் தொடர்ந்து ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெறும் வாகன பேரணியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.