நாகங்களின் கடவுளாக கருதும் மனாசா தேவியை சாந்தி படுத்துவற்காக ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் ஒருநாள் விநோதமான சடங்கை மேற்கொள்கின்றனர். அதில் பாம்பாட்டிகளை பாம்புகள் கடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சங்கர்தா கிராமம். இங்கு பழங்குடி மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் விஷபாம்புகளை  வைத்து நிகழ்ச்சி நடத்தி தொழில் பார்க்கின்றனர். இந்த மக்கள் தங்கள் குலதெய்வமாக நாகங்களின் கடவுளாக கருதும் மானசா தேவியை வழிபடுகின்றனர். மானசா தேவியை சாந்தப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் திருவிழா நடத்துகின்றனர்.

இரவு நேரத்தில் நடைபெறும் பூஜையின் போது பாம்பாட்டிகளை ரதத்தின் மீது அமர வைத்து பாம்புகளை கொண்டு கடிக்க வைக்கின்றனர். பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் இந்த நிகழ்வு குறித்து அந்த ஊரைச் சேர்ந்த கருணமே மண்டல் என்பவர் கூறுகையில், நாகங்களின் கடவுளான மனாசா தேவியை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வழிபடுகிறோம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் கடவுளை சாந்தப்படுத்துவற்காக பாம்பாட்டிகள் ரதத்தில் அமருகின்றனர். பின் பூஜைகள் நடைபெறுகிறது. அப்போதுதான் பாம்புகள் அவர்களை கடிக்கும்  என தெரிவித்தார்.

பாம்பின் விஷம் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது வலிமை கொடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பாம்பாட்டிகள் பாம்பிடம் கடி வாங்குகின்றனர். பூஜை நேரத்தில் ரதத்தில் பாம்பாட்டிகள் இருந்தால் பாம்பின் விஷத்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.