p.chidambaram support for aravind kejriwal

டெல்லியில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஆஜராகிறார்.

டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கிடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான போட்டி நீடித்தது. இதையடுத்து டெல்லியில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், துணைநிலை ஆளுநருடன் ஆலோசனை செய்யாமல் முதல்வரோ அமைச்சர்களோ எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அரசியல் சாசனம் குறித்த கேள்வி எழுந்ததால், இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், டெல்லி அரசு சார்பில் ஆஜராகும் 9 வழக்கறிஞர்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் ஒருவர். ப.சிதம்பரம் ஆஜராகி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாட உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிதம்பரத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்திருந்தாலும் கட்சி பேதமின்றி சிதம்பரம் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.