The last 2 days before the introduction of the fee charged by the state of the project yesterday U-turn has turned paytm
கிரெடிட் கார்டு மூலம் பே-டிஎம் ‘மொபைல் வாலட்’டில் ‘டாப் அப்’ செய்தால் 2 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற முடிவை ‘பே-டிஎம்’ நிறுவனம் நேற்று திடீரென வாபஸ் பெற்றது.
கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த கட்டணம் விதிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், நேற்று ‘யு-டர்ன்’ அடித்துள்ளது பே-டிஎம்.
ரூபாய் நோட்டு தடை கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டதும், ‘பே-டிஎம்’ நிறுவனம்டிஜிட்டல் பரிமாற்றத்தை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தியது. சிறுவணிகர்கள் கட்டணம் இன்றி பணத்தை வாடிக்கையாளர்களிடம் பரிமாற்றம் செய்ய அனுமதித்தது.
ஆனால், ‘பே-டிஎம்’ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர் தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் ‘மொபைல் வாலட்டை’ ‘டாப் அப்’ செய்து கொண்டு, அந்த பணத்தை எந்தவிதக் கட்டணம் இன்றி, தங்கள் வங்கிக்கணக்குக்கு மாற்றி வருகின்றனர் என்பதை ‘பே-டிஎம்’ நிறுவனம் கண்டுபிடித்தது. இதையடுத்து கிரெடிட் கார்டு மூலம் டாப்-அப் செய்பவர்களுக்கு 2 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என கடந்த 8-ந்தேதி அறிவித்தது.
ஆனால், பே-டிஎம் நிறுவனங்களுக்கு போட்டியான ‘மொபிவிக்’ உள்ளிட்ட சில நிறுவனங்கள்மொபைல் வாலட்டுக்கு கட்டணம் இல்லாமல் சேவையை தொடர்ந்து செய்துவருவதால், ‘பே-டிஎம்’நிறுவனத்துக்கு கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கட்டணம் விதிக்கும் முடிவை 2 நாட்களில் திரும்பப் பெற்றுள்ளது பே-டிஎம்.
இது குறித்து பே-டிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் அபாட் கூறுகையில், “ லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் நலன்தான் முக்கியம். ஆதலால், கிரெடிட்கார்டுகள் மூலம் நடக்கும் பரிமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட 2 சதவீதம் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய முன்னுரிமை என்பது எப்போதுமே வாடிக்கையாளர்கள் நலன் மட்டுமே. அவர்கள் ‘பே-டிஎம்’ பயன்படுத்துவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். லட்சக்கணக்கான இந்தியர்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்குள் கொண்டு வர முயற்சிப்போம்'' எனத் தெரிவித்தார்.
