அடுத்த 3 நாட்களில் 16 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ‘பே-டிஎம்’ வாலட் , பேடிஎம் ‘பேமெண்ட் பேங்க்’ ஆக மாறப்போகிறது. இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி அளித்துவிட்டது.

இதனால், பேடிஎம் வாலட்டில் பணம் வைத்திருப்பவர்கள் அடுத்து என்ன ஆகும்? என்று பதற்றத்தில் உள்ளனர். பணம் தொடர்ந்து வாலட்டில் இருக்குமா? அல்லது பேடிஎம் டெபாசிட்டாக மாறிவிடுமா? என்பது தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது-

ஜனவரி 15-ந்தேதிக்கு பின் பேடிஎம் வாலட் என்பது பேடிஎம் ‘பேமெண்ட் வங்கி’யாக மாறுகிறது.  இதனால், ஏற்கனவே வாலட்டில் பணம் வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

உதாரணமாக ஒருவர் பேடிஎம் வாலட்டில் ரூ.2 ஆயிரம் வைத்து இருந்தால், பேமெண்ட் வங்கிக்கு மாறும்போதும் அதே தொகைதான் இருக்கும். ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகும் பேடிஎம். வாலட் இயங்கும். பேடிஎம்மில் ‘லாகின் செய்வது’, இருக்கும் பணத்தை பரிமாற்றம் செய்வது என அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

பேடிஎம். வாலட்டில் கணக்கு வைத்து இருப்பவர்கள் இயல்பாகவே பேடிஎம் பேமெண்ட் வங்கியில் புதிய கணக்கு கிடைத்துவிடும் என்பது தவறு. பேமெண்ட் வங்கி தொடங்கப்பட்ட உடன் வங்கிக்கான விதிமுறைகள் செயல்படத்தொடங்கிவிடும். தனியாக கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

பேடிஎம் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்க இருப்பவர்கல், கண்டிப்பாக கே.ஒய்.சி. விதிமுறைகளைப் பின்பற்றி, ஆதார், பான்கார்டு எண் ஆகியவற்றை இணைத்தோ அல்லது பதிவேற்றம் செய்தோ கணக்கு தொடங்கலாம். பேடிஎம் வங்கியில் பணம் டெபாசிட் செய்தால் என்ன வட்டி கிடைக்கும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் பேமெண்ட் வங்கியைத் தொடங்கி ஆண்டுக்கு 7.25 சதவீதம் வட்டியை சேமிப்பு கணக்குக்கு அளித்து வருகிறது. இதற்கு போட்டியாகவே வட்டி வீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.