ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, காஷ்மீர் குழந்தைகளின் கனவு இனி நனவாகும் என தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, காஷ்மீர் குழந்தைகளின் கனவு இனி நனவாகும் என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு - காஷ்மீரை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும் லடாக்கை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இரண்டாக பிரித்தது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஜனநாயக படுகொலை எனவும், அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்ட நாள் கறுப்பு நாள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய விடியல் உதயமாகியுள்ளது. காஷ்மீரில் புதிய பயணம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ஊழல், தீவிரவாதம், குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கு வழிவகுத்ததே தவிர, மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. 

சட்டப்பிரிவு 370 காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. இனிமேல் காஷ்மீர் மக்களின் வாழ்வு செழிக்கும். சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கனவு நனவாகியுள்ளது. இனி காஷ்மீர் குழந்தைகளின் கனவு நனவாகும் என்று தெரிவித்தார்.