உள்நாட்டில் விமானப் பயணத்துக்கும் பாஸ்போர்ட், அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் அல்லது ஜூலை முதல் அமலுக்கு வரும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதற்குமுன்...

ஏற்கனவே ‘பான்கார்டு’, வருமானவரி ரிட்டன், வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகனப்பதிவு உள்ளிட்ட பலவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது விமானப்பயணத்துக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

இது குறித்து விமானப்போக்குவரத்து துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “உள்நாட்டு விமானப்பயணத்துக்கும் பாஸ்போர்ட் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளோம். விமானப்பயணத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட  4 வகையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க முன்எச்சரிக்கையாக பயணிகளின் அடையாளம் தேவைப்படுகிறது.

. அதனால், விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் பாஸ்போர்ட் அல்லது ஆதார் எண்களை கேட்க உள்ளோம். இதில் எது இருக்கிறதோ அதை அவர்கள் அதிகாரிகளிடம் அளிக்கலாம். டிக்கெட் முன்பதிவின்போதே பயணிகள் தங்கள் ஆதார் அல்லது பாஸ்போர்ட் எண்ணை தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றன

விமானப்போக்குவரத்து துறை அமைச்சகத்தின் வரைவு மசோதா பொதுமக்களின் பார்வைக்கு அடுத்த வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். ஏறக்குறைய 30 நாட்கள் இணையதளத்தில் இருக்கும் இந்த அறிவிப்பில் ஏதேனும் ஆலோசனைகள் கூற விரும்பினால், மக்கள் அதில் தங்கள் கருத்துக்களை பதிவிடலாம். அதன்பின் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச விமானப் பயணம் மேற்கொள்ளும் போது, டிக்கெட் முன்பதிவின்போதே போஸ்போர்ட் விவரங்களை கேட்கும் நடைமுறை இருக்கிறது. அதை உள்நாட்டு பயணித்துக்கும் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

அதுமட்டுல்லாமல், விமானப் பயணத்தில் பிரச்சினை செய்வோர், அதிகாரிகள், ஊழியர்களுடன் ரகளை செய்வோர், சகபயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்போர்ஆகியோர் மீது எந்த விதமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அது எந்தவிதமான குற்றங்களில் இணைக்கலாம் என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்க அரசு ஆலோசித்து வருகிறது.

சமீபத்தில், சிவசேனா எம்.பி.ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா துணை மேலாளரை செருப்பால்அடித்தது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. அவர் விமானப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், மன்னிப்பு கோரிய நிலையில், தடை நீக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, நெறிமுறைகளையும் வகுக்க இருக்கிறது மத்திய அரசு.