நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று முன் தினம் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், அவை நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 33 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், திரிணாமூல் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, சுகதா ராய் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர் 33 பேர் இன்று ஒரே நாளில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை வரலாற்றில் முதன்முறையாக 33 எம்.பி.க்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டும், தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளே வர அனுமதிச்சீட்டு வழங்கிய பாஜக எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தங்கப்பத்திரம் விநியோகம் தொடக்கம்: என்னென்ன நன்மைகள்?
முன்னதாக, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.பி., கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி, சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதற்காக இன்று மீண்டும் 33 எம் பி கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை வரலாற்றில் 46 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு. நாளை இன்னொரு நான்கு எம்.பி.,களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
“ஊடுருவல் காரர்கள் இரண்டு பேர் மக்களவைக்குள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு நியாயம் கேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகம் இரண்டின் மீதும் மோடி அரசாங்கம் தாக்குதல் நடத்தியுள்ளது.” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.