Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன

Parliament monsoon session loksabha rajyasabha adjourned
Author
First Published Jul 20, 2023, 11:57 AM IST

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கூடும் முதல் கூட்டத் தொடர் இது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முதலில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கி, பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கூட்டத்தொடரை சுமூக நடத்த அனைத்து கட்சிகளுக்கு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், மொத்தம் 31 மசோதாக்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம், மத்திய அரசு ஏஜென்சிகளின் ரெய்டு சம்பவங்கள், ஆளுநர்களை கொண்டு ஆட்சி செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் வீடியோ நாட்டையே உலுக்கியுள்ளது. மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விவாதிக்க பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. மணிப்பூரில் உள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை: பியூஷ் கோயல் காட்டம்!

இந்த நிலையில் திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் காலமான மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், கடந்த ஜூன் மாதம் காலமான ஹர்த்வார் துபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிங்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம்; இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios