Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 4ஆவது நாளாக முடங்கியது!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Parliament monsoon session Both Houses Adjourned
Author
First Published Jul 25, 2023, 11:42 AM IST

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத்தொடரில் மொத்தம் 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. அதேசமயம், மணிப்பூர் விவகாரம், எல்லை பிரச்சினை, வேலையிண்மை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.

ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரதானமாக கையில் எடுத்துள்ளன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும்  என வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. 

மாநிலங்களவையில் மட்டும் விதி எண் 267இன் கீழ் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வலியுறுத்தி 50 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கு தயாராக இருப்பதாக மத்திய பாஜக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது.

மணிப்பூர் வீடியோ: 7ஆவது நபர் கைது!

இன்றைய நாளுக்கான அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால், மாநிலங்களவை 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டன. நேற்றைய தினம் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றி ஆளும் பாஜக குரல் எழுப்பி வருகிறது. இது தொடர்பாக, விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்த பாஜக எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால், மணிப்பூர் விவகாரத்தை திசைதிருப்பும் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios