தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற ஊடுருவல்காரர்கள்!
நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் தற்கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அதன் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் தற்கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அதன் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களை தீக்கிரையாக்க திட்டமிட்டதாகவூம், ஆனால், அவர்களது காயங்களைக் குறைக்க 'தீ தடுப்பு ஜெல்' வாங்க முடியாததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் லலித் ஜா தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது, புகை உமிழும் கருவியை பயன்படுத்தியது பிளான் பி எனவும் அவர் தெரிவித்துள்ளார். லலித் ஜாவின் இந்த கூற்று, வெறும் விளம்பரத்துக்காக அவர்கள் இந்த செயலை செய்யவில்லை என்பதை விசாரணை புலனாய்வாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், தனது செல்போனையும், தனது கூட்டாளிகள் செல்போனையும் எரித்து அழித்ததை லலித் ஜா விசாரணையின் போது ஒப்புக்கொண்டார். இது, சதித்திட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்ற டெல்லி காவல்துறையின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1200 கோடி பெற்ற ஐந்து பிராந்திய கட்சிகள்: திமுக பெற்றது எவ்வளவு?
கொல்கத்தா சுற்றுவட்டாரத்தில் முன்பு வசித்த போது அவர் நடத்திய டியூஷன் வகுப்புகள் காரணமாக 'மாஸ்டர்ஜி' என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் லலித் ஜா. சம்பவத்தன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை உமிழும் கருவியை வெடிக்க செய்து விட்டு, குற்றம் சாட்டப்பட்ட சக நபர்களின் செல்போன்களுடன் லலித் ஜா தலைமறைவாகி விட்டார்.
எதிரி நாடு அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் லலித் ஜாவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். மேலும், அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
“நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு, லலித் ஜா ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றார். அங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். பின்னர், நேற்றிரவு டெல்லிக்குத் திரும்பியுள்ளார்.” என டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.