சர்வதேச அளவில் வி.ஐ.பி.கள் தங்களின் கணக்கில் வராத சொத்துக்களை வெளிநாடுகளில் மறைத்துவைத்துள்ளது குறித்து வெளியான ‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நோட்டீஸ் அனுப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சர்வதேச அளவில் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வி.ஐ.பி.கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைக்க பனாமா நாட்டைச் சேர்ந்த பொன்சேகா எனும் நிறுவனம் உதவியது.
இந்த நிறுவனம் தொடர்பான ஆவணங்களை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரின் உறவினர்கள் பலரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இவர்கள் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்து வைத்திருப்பது அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் உள்ளிட்ட பலர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பிரதமர் நவாஸ் ஷெரீப் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அன்வர் ஜாகீர் ஜமாலி, ஜாகுல் அஹ்சன், கில்ஜி ஆரிப் ஹூசைன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “ பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம், மகன்கள் ஹசன் மற்றும் ஹூசைன், மருமகன் முகமது சப்தார், நிதியமைச்சர் இஸ்காக் தார், புலனாய்வு அமைப்பின் தலைவர், வருவாய் அமைப்பின் தலைவர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
