அவதூறு துண்டு பிரசுர விவகாரத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக உள்ளேன் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, 5 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷியும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங் லல்வியும் போட்டியிடுகிறார்கள். 

இந்நிலையில் காம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் கூறியிருந்தார். காம்பீர் விநியோகித்த துண்டு பிரசுரத்தில் தன்னை பற்றி மோசமாக அவதூறு பரப்பியதாக அவர் குற்றம்சாட்டினார். காம்பீர் சார்பில் வெளியிடப்பட்ட லட்சக்கணக்கான துண்டு பிரசுரத்தில் தனது ஒழுக்கம் குறித்து மோசமான வகையில் அவதூறு வார்த்தையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக அதிஷி கண்ணீர் மல்க தெரிவித்தார். இத்தகைய எண்ணத்துடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். 

இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள கம்பீர், கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலக தயாரா? என கவுதம் கம்பீர் சவால் விடுத்துள்ளார்.