காஷ்மீரில் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களை நடத்திய, பாகிஸ்தான் தீவிரவாதி அபு துஜானாவையும், அவனது கூட்டாளியையும் ராணுவத்தினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீரில் 36-க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த, மிகவும் தேடப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த லக்‌ஷர் –இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி அபு துஜானா, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ராணுவத்தினர் துரிதமாக செயல்பட்டனர்.

தீவிரவாதி அபு துஜானா காஷ்மீரில் உள்ள அவனது மனைவியை சந்திக்க வந்துள்ளான். அதை அறிந்த போலீசார் அவன் சென்ற பாதையை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்தனர்.

அவன் ஹக்ரிபோரா கிராமத்தில் பதுங்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ராணுவத்தினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். ராணுவத்தினர் சுமார் 2 மணி நேரம் எந்த சத்தமும் இன்றி நிசப்தமாக முற்றுகையிட்டு அந்த வீட்டை கண்காணித்தனர். இதன் பிறகு அவர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளும் திருப்பி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நீடித்தது. இதையடுத்து தீவிரவாதிகள் தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக வேறு வழியின்றி அந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதி அபு துஜானாவும் அவரது கூட்டாளியான அரிப் லிலாரியும் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தீவிரவாதி அபு துஜானாவின் தலைக்கு 15 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அபு துஜானாவை சுட்டுக்கொன்றது ராணுவத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என கருதப்படுகிறது.