ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதில் இருந்து எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க இந்தியா ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜௌரி ஆகிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நடக்கும் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக பதில் தாக்குதல் அளிக்க தொடங்கியது.

இது மட்டுமில்லாது சுந்தர்பானி, நவ்ஷேரா ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பலத்த பதிலடி கொடுத்து வருகிறது.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிலவி வருவதால் எல்லையோர கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டுகளை வீசியுள்ளதால், அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்தியராணுவம் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.