பாகிஸ்தானில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு நிறுவனத்தை தகர்த்துவதற்காக, அந்த பகுதியில் பதுங்கி இருந்த அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், முல்தான் மாவட்டத்தின் சுஜாபாத் பகுதியில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு அமைப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமாக சிலர் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால், உஷாரான, பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 8 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலில் இறந்தவர்கள் தடை செய்யப்பட்ட அல்கொய்தா மற்றும் தெஹ்ரி இ தலிபான் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.